சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தீமிதி விழா நேற்று மாலை நடைபெற்றது. காலையில் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து அம்மன் திருக்கல்யாண ஊர்வலம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து மாலையில் அம்மன் பக்தர்களுடன் சின்னதிருப்பதி சென்று நீராடிவிட்டு மஞ்சள் ஆடை அணிந்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து தீமிதி விழா தொடங்கியது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். குறிப்பாக ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள், திருநங்கைகள் உள்பட பலர் தீமிதித்தனர். ஆண்கள், பெண்கள் சிலர் தங்களது குழந்தைகளை சுமந்தபடி தீமிதித்தனர். இதையடுத்து இரவில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு பால்குடம் ஊர்வலம் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.