சேலம் கலெக்டர் அலுவலகத்தில் `தமிழ் புதல்வன் திட்டம்' செயல்படுத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது. இதில் தகுதியுடைய அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்துக்கு பின் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: - மாவட்டத்தில் "புதுமைப் பெண்" திட்டத்தின் மூலம் 15, 629 மாணவிகள் மாதம் ரூ. 1, 000 பெற்று வருகின்றனர். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் வழிக்கல்வியில் படித்த மாணவிகளுக்கும் உதவித்தொகை பெறும் வகையில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கில வழியிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து மேற்படிப்பில் சேரும் மாணவர்கள் பயனடையும் வகையில் `தமிழ்ப் புதல்வன் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. உயர்க்கல்வியில் சேரும் போது கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவிகளை இந்த திட்டத்தில் சேர்த்து பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.