கூடுதல் விலைக்கு விற்பனையா? டாஸ்மாக் கடைகளில் திடீர் சோதனை

68பார்த்தது
கூடுதல் விலைக்கு விற்பனையா? டாஸ்மாக் கடைகளில் திடீர் சோதனை
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை (புதன்கிழமை) முதல் 19-ந் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் மதுப்பிரியர்கள் இப்போதே டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுபாட்டில்களை கூடுதலாக வாங்கி செல்கிறார்கள். 3 நாட்கள் கடை விடுமுறை என்பதால் ஒருசில டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், ரூ. 210-க்கு விற்க வேண்டிய குவார்ட்டர் மதுபாட்டில் ரூ. 30 கூடுதலாக வைத்து ரூ. 240-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதனிடையே டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தனஞ்செயன் தலைமையில் அதிகாரிகள் சேலம் மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறும் போது, ‘நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. தொடர் விடுமுறையால் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்து கண்காணித்து வருகிறோம். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக மது விற்பனை செய்வது தெரியவந்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.