சேலம் அழகாபுரம் ரெட்டியூர் மற்றும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதிகளில் நிறைவாழ்வு முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 80-க்கும் மேற்பட்ட முதியவர்களை லிட்டில் பியர்ல்ஸ் அறக்கட்டளையினர் பராமரித்து வருகின்றனர். இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுக்கை நிலையில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது தன்னலமற்ற சேவையை அறிந்த சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள சேசாஷ் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பில் அழகாபுரம் ரெட்டியூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு அத்தியாவசிய பொருட்களான குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம், பிரிட்ஜ், மின் விசிறிகள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினர். மேலும் இல்லத்தில் உள்ள முதியவர்களிடம் பேசி அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பூங்கோதை, அல்மாஸ், கோகிலா, முதியோர் இல்ல நிர்வாகி ராமஜெயம் மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் கலந்து கொண்டனர். நல உதவிகளை வழங்கிய பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்திற்கு முதியோர் இல்ல நிறுவனர் அண்ணாதுரை நன்றி கூறினார்.