சேலம் மண்டல தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் கருப்பூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று (டிசம்பர் 23) நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஆர். சிவலிங்கம் (கிழக்கு), டி.எம். செல்வகணபதி எம்.பி (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப அணி சேலம் மண்டலப் பொறுப்பாளர் டாக்டர் ஏ.கே. தருண் வரவேற்புரை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கிப் பேசினார். அவர் பேசும்போது, 'பொய்யான தகவல்களைப் பரப்புவதில் பா.ஜனதா கட்சி முதல் இடத்தில் உள்ளது. பொய்ப் பிரசாரங்களை தகவல் தொழில்நுட்ப அணியினர் முறியடிக்க வேண்டும்.
உலகில் பல நாடுகள் பாராட்டும் திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறார். இந்தத் திட்டங்களை மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் முழுப் பொறுப்பில் தகவல் தொழில்நுட்ப அணியினர் ஈடுபட வேண்டும். முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று, தகவல் தொழில்நுட்ப அணியினர் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்' என்றார்.