சேலம் அழகாபுரம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 42). இவர், கட்டுமான வேலைகளுக்கு சென்ட்ரிங் பொருட்களை வாடகைக்கு கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், ஓமலூரை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் முருகேசன் (45), இவருடைய மனைவி இந்திராணி (37) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நந்தகோபாலிடம் வாடகைக்கு கட்டிட பொருட்களை முருகேசனும், அவரது மனைவியும் எடுத்து சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முருகேசன் மற்றும் அவரது மனைவி இந்திராணி ஆகியோர் தற்போது நாங்கள் இருவரும் சொந்தமாக பல பகுதிகளில் சென்ட்ரிங் வேலை செய்து வருவதாகவும், அதனால் தங்களுக்கு பொருட்கள் பற்றாக்குறை இருப்பதால் மாத வாடகைக்கு சென்ட்ரிங் பொருட்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர். இதற்காக மாதம் ரூ. 10 ஆயிரம் தருவதாகவும் கூறினர். இதை நம்பிய நந்தகோபால் அவர்களிடம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை வாடகைக்கு கொடுத்தார். ஆனால் வாடகைக்கு எடுத்து சென்ற பொருட்கள் பல மாதங்கள் ஆகியும் அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. மேலும், வாடகை பணத்தையும் கொடுக்காமல் தம்பதி ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் நந்தகோபால் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி முருகேசன், அவருடைய மனைவி இந்திராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.