ஓய்வூதிய பணம் வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கருவூல அதிகாரி கைது

70பார்த்தது
ஓய்வூதிய பணம் வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கருவூல அதிகாரி கைது
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் தில்பாஷா. இவர் கூட்டுறவுத்துறையில் சார்பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த ஆண்டு இறந்தார். இவருடைய ஓய்வூதிய பணப்பலன்கள் பெற அவரது மகள் ஷர்மிலி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலகத்தில் சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கருவூல கண்காணிப்பாளர் தனபால் (வயது 54), ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஷர்மிலி இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் ரசாயன பவுடர் தடவிய ரூ. 5 ஆயிரத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார், ஷர்மிலியிடம் நேற்று மதியம் கொடுத்து அனுப்பினர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் முருகன், நல்லம்மாள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கருவூல அலுவலகத்தில் ரகசியமாக கண்காணித்தனர். பின்னர் மதியம் சூப்பிரண்டு தனபாலிடம், ஷர்மிலி ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கருவூல அலுவலக சூப்பிரண்டு தனபாலை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி