சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல், முன்பதிவு இல்லாமல் டிக்கெட் எடுத்து முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்தல், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பொருட்களை கொண்டு செல்லுதல் உள்ளிட்ட ரயில்வே விதிமுறைகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டிக்கெட் பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 256 பேர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 9 கோடியே 79 லட்சத்து 508 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி பயணம் செய்ததாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 264 பேரிடம் இருந்து 6 கோடியே 4 லட்சத்து 97 ஆயிரத்து 169 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பொருட்களை எடுத்துச் சென்றதாக கண்டறியப்பட்டு அந்த வகையில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 68 சதவீதம் அதிகமாகும்.