சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் மாநகர தெற்கு போக்குவரத்து பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 24-ந் தேதி கோட்டை மாரியம்மன் கோவில் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அவர் கோவில் அருகே வந்தார். அப்போது அங்கு அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருமந்துறை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (35). இவர் நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்குள் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து அவர் அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் வீராணம் பகுதியை சேர்ந்த முருகன் (54) என்பவரது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளும், அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (76) என்பவரது மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்து அவர்கள் போலீஸ் நிலையங்களில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.