தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தலா 20 கி.மீ. தூரமும் சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. மேலும் 13 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு தலா 15 கி.மீ. தூரமும் நடைபெற்றது.
முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ. 3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரமும் அவர்களது வங்கி கணக்கு மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ. 250-மும் வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளில் மொத்தம் 250 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, டி.எம். செல்வகணபதி எம்.பி., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.