சேலம் அருகே உள்ள தளவாய்பட்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா (வயது 41). இவர் நேற்று (நவம்பர் 11) மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது வீட்டில் அவர்களுடைய மகன் விஜய் (23) மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் அவருடைய வீட்டுக்கு 2 மர்ம நபர்கள் சாம்பிராணி புகை போடுவதற்காக வந்தனர்.
பின்னர் அவர்கள் வீட்டிற்குள் புகை போட்டுவிட்டு சென்றனர். மாலையில் விஜயா வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் பீரோவை திறந்து பார்த்த போது, அதில் இருந்த 3½ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து நடந்த விவரங்களை விஜய் தனது தாயாரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நகை திருட்டு போனது குறித்து விஜயா இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.