பருத்தி விதைகள் வேளாண்மை துறை திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். இதில், வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: - மாவட்டத்தில் ஆண்டு மழை அளவு 100. 4 மில்லி மீட்டராகும். இந்த ஆண்டு கடந்த மாதம் வரை 563. 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தேவையான அளவு நெல், சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி விதைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரக்கடைகளில் உரங்கள் விற்கப்படுவதை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், வேளாண் எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல், திறந்தவெளி கிணறு பண்ணை குட்டைகள் அமைத்தல், கிராம குளங்கள் சீரமைத்தல் பணிகளை அலுவலர்கள் சிறப்புடன் செயல்படுத்த வேண்டும். அதே போன்று பவர் டிரில்லர் மானியத்தில் வழங்குதல், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு அரசு திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும். இந்த பணிகளை வேளாண்மை மற்றும் அதன் சார்புத்துறை அலுவலர்கள் முனைப்போடு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.