சேலம் கடைவீதி பகுதியில் வ. உ. சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி, கம்மாளப்பட்டி, பனமரத்துப்பட்டி, மன்னார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி, நந்தியாவட்டம் உள்ளிட்ட பல பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
சுபமுகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம் ஆகும். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வளர்பிறை முகூர்த்தநாளையொட்டி திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் ஏராளமாக நடைபெறுகிறது. இதனால் நேற்று மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
கடந்த வாரம் கிலோ ரூ. 250-க்கு விற்ற குண்டுமல்லி நேற்று ரூ. 500-க்கு விற்பனையானது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ. 200-க்கு விற்ற சன்னமல்லி ரூ. 320-க்கும், கடந்த வாரம் ரூ. 240-க்கு விற்ற காக்கட்டான் மற்றும் மலைக்காக்கட்டான் ஆகியவை ரூ. 300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் சாதா சம்பங்கி கிலோ ரூ. 150-க்கும், கலர் காக்கட்டான் ரூ. 240-க்கும், வெள்ளை அரளி, மஞ்சள் அரளி ஆகியவை தலா ரூ. 30-க்கும், செவ்வரளி ரூ. 80-க்கும், ஐந்தடுக்கு செவ்வரளி ரூ. 40-க்கும் விற்பனையானது.
மாலை கட்டுவதற்கு பயன்படுத்த கூடிய நந்தியாவட்டம், சின்ன நந்தியாவட்டம் ஆகியவற்றின் விலை நேற்று கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.