சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 7-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து கோவிலில் பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான பொங்கல் வழிபாடு மற்றும் உருளுதண்டம் நிகழ்ச்சி வருகிற 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
திருவிழாவில் பக்தர்கள் நெரிசல் இன்றி அம்மனை தரிசிக்கவும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே நேற்று மாலை போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு கோவிலுக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.