சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் கூறிய கருத்துக்கள் விவரம் வருமாறு: -
விவசாயி பெரியண்ணன்: - முத்துநாயக்கன்பட்டி, பாகல்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை உள்ளிட்ட கிராமங்களில் தட்டைப்பயறு, பாசி பயறு, நிலக்கடலை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. போதிய மழை இல்லாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பயறுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்பவர்களை விவசாய நிலங்களுக்கு பணியாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருப்பதால் கள் இறக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
சண்முகம்: - வசிஷ்ட நதி, சுவேதா நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கப்படுகின்றன. இதனால் நீர் மாசுபடுகிறது. எனவே நீர்நிலைகளில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலக்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிந்தராஜ்: - சில இடங்களில் வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளிடம் பணம் பெறப்படுவதாக புகார்கள் வருகின்றன. இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.