சேலத்தில் தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

52பார்த்தது
சேலத்தில் தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மூப்பனார் நகரில் வசித்து வருபவர் செந்தில்ராஜ். இவருடைய மகன் மனோஜ் (வயது 20). இவர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி பி. இ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற அவர், மாலையில் விடுதிக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில், விடுதியின் பக்கத்து அறையில் தங்கியிருந்த சக மாணவர்கள், வெளியில் கடைக்கு செல்வதற்காக மனோஜை அழைப்பதற்காக அவரது அறைக்கு சென்றனர். அப்போது அவரது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மனோஜ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக விடுதி வார்டன் மற்றும் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று இறந்துபோன மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதவிர, கும்பகோணத்தில் உள்ள மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி