24 மனை தெலுங்கு செட்டியார் பேரவையின் நூற்றாண்டு மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குதல், சமுதாய வளர்ச்சிக்காக அர்ப்பணித்து சேவையாற்றி வரும் மூத்த நிர்வாகிகளை பாராட்டி கவுரவித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் பேரவையின் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாநில மாநாட்டில் அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்குமாறு அவர்களை பேரவை நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.
அதன்படி, சேலத்தில் நடக்கும் 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவையின் மாநில மாநாட்டில் பங்கேற்க அதன் நிறுவன தலைவர் ஜெகநாத்மிஸ்ரா தலைமையில் நிர்வாகிகள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ. தி. மு. க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மாநாடு அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தனர். அப்போது பேரவை மாநில தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி செயலாளர் எம். எஸ். மணி, பொதுச்செயலாளர் கோகுல்மெட்டல் மணி, தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ராமச்சந்திரன், நாமக்கல் செந்தில், செய்தி தொடர்பாளர் கந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.