நாடாளுமன்ற தேர்தலில் பா. ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான பதவி ஏற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு மயில் இறகால் ஆன கிரீடம், செங்கோல், மாலை ஆகியவற்றை பா. ஜனதா சார்பில் வழங்குவதற்கு அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே. பி. ராமலிங்கம் ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து அந்த பொருட்களை நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவிலுக்கு கொண்டு வந்து பூஜைகள் செய்து பதவியேற்பு விழாவுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் கே. பி. ராமலிங்கம், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதையடுத்து கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்ட கிரீடம், செங்கோல், மாலை ஆகியவை மூலவர் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பா. ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.