சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் உள்ள மூக்கனேரியில் ரூ. 23 கோடியில் புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு, நடைபயிற்சி பாதை அமைத்தல், உட்புறம் மற்றும் வெளிப்புறம் பகுதிகளில் பாதுகாப்பு வேலி அமைத்தல், இருக்கை வசதி அமைத்தல், குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், தியான பகுதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதேபோல் சூரமங்கலம் மண்டலத்தில் உள்ள பள்ளப்பட்டி ஏரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 16 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கரைகளை சீரமைக்கப்படுதல், கற்கள் பதித்தல், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளையும் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் (பொறுப்பு) செந்தில்குமார், மாநகர நல அலுவலர் முரளிசங்கர், செயற்பொறியாளர் திலகா, உதவி செயற்பொறியாளர்கள் ஓபுளி சுந்தர், செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.