சேலம் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சேலத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகள் மூலம் அனைத்து விதமான அரசு ஒப்பந்தங்களான சாலை அமைத்தல், பல்வேறு கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கான ஜல்லி, எம்சான்ட், பிசான்ட் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கல் குவாரி உரிமையாளர்கள் சமீப காலமாக ஜல்லி, எம்சான்ட், பிசான்ட் விலையை உயர்த்தியது குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அதேபோன்று ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் விலைகளை குறைக்க வேண்டிய அவசியம் குறித்தும் சுற்றுலாத்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பொதுமக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள ஏதுவாக ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய விலையில் வழங்கிடுமாறு கல்குவாரி உரிமையாளர்களை கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து பேசிய கல்குவாரி உரிமையாளர்கள் விலை உயர்வை குறைத்து வழங்குவதாக உறுதியளித்தனர்.