கடந்த 1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி மனு ஸ்மிருதி எரிப்பு போராட்டத்தை சட்டமேதை அம்பேத்கர் நடத்தினார். இதை நினைவு கூரும் வகையில், சேலம் மாநகர் மாவட்ட எஸ். சி. பிரிவு சார்பில் மனு ஸ்மிருதி எரிப்பு போராட்டம் நேற்று (டிசம்பர் 25) முள்ளுவாடி கேட் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு எஸ். சி. பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் வக்கீல் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். எஸ். சி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் தினகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாநகர தலைவர் ஹரிராமன், கிழக்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மனுவை எரித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாநகர பொருளாளர் ராஜகணபதி, மாநகர துணைத்தலைவர் மொட்டையாண்டி, மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.