அம்பேத்கர் பற்றி பேசிய மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும். பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு தொடங்கிய ஊர்வலத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் முள்ளுவாடி கேட் வழியாக கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. பின்னர் கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை ஜனாபதிக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் மனு கொடுத்தனர். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.