சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், தேக்கம்பட்டி, வெள்ளாளப்பட்டி, மூங்கில்பாடி, கொல்லப்பட்டி புதூர் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் எளிதாக சென்றடையும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் செங்கரடு சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமை உதவி கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஓமலூர் தாசில்தார் ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதா பரமேஷ், வெண்ணிலா, செல்வி, கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் வருவாய் துறை, மின்சார வாரியம், வீட்டு வசதி வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்பு மருத்துவ துறை, ஊரக வளர்ச்சி துறை உள்பட 16 துறைகளைச் சேர்ந்த துறை அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதில் 1, 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு கம்ப்யூட்டரில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மனுக்கள் பெறப்பட்டதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.