சேலம் நான்கு ரோடு அருகே உள்ள தம்மண்ணன் ரோடு பகுதியில் சிவபாலன் என்பவருக்கு சொந்தமான சிவபாலன் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம் மாநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சில்லறை விற்பனைக்கு அனைத்து நிறுவனத்தின் சிகரெட்களும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல நேற்று பணியை முடித்துவிட்டு இரவு அலுவலத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சிவபாலன் அலுவலகத்தை திறக்க வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது சிகரெட் பண்டல்கள் அடங்கிய பெட்டிகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெியவந்தது. சிவபாலன் இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவராஜன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அலுவலகத்தை சோதனை மேற்கொண்டனர். கைரேகை பதிவு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்
அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் வேனில் வந்து அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சிகரெட் பண்டல் அடங்கிய 20 பெட்டிகளை வேனில் ஏற்றி திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.