சேலம் நரசோதிப்பட்டியில் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்

1110பார்த்தது
சேலம் நரசோதிப்பட்டி 2-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 57). அதே பகுதியில் கார்களுக்கான கண்ணாடி சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். நேற்று காலை வெங்கடேஷ் வழக்கம்போல் கார் கதவை திறந்து இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் உடனடியாக காரில் இருந்து வெளியே வந்தார். இதுகுறித்து சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் சிராஜ் அல்வனீஷ் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீயில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

முதற்கட்ட விசாரணையில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கார் தீப்பிடித்திருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி