வாலிபரை தாக்கி வாகனத்தை பறித்த 4 பேர் கைது

62பார்த்தது
வாலிபரை தாக்கி வாகனத்தை பறித்த 4 பேர் கைது
சேலம் சூரமங்கலம் அடுத்த மல்லமூப்பம்பட்டி பூனைகரடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 34). ஐ. டி. ஐ. படித்துவிட்டு பிளம்பராக வேலை செய்து வருகிறார். இவர், கிச்சிப்பாளையம் ஆறுமுகம் நகரில் உள்ள தனது சித்தப்பாவை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவரது வண்டியில் திடீரென பழுது ஏற்பட்டது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளை தொடர்ந்து இயக்க முடியாததால் சிறிது தூரம் தள்ளிக்கொண்டு சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த 4 பேர் திடீரென அசோக்குமாரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அசோக்குமாரை தாக்கிவிட்டு அவரது மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அசோக்குமாரை தாக்கி அவரது மோட்டார் சைக்கிளை பறித்து சென்றது, கிச்சிப்பாளையம் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சபரிநாதன் (20), லட்சுமி நாராயணன் (19), ராஜசேகர் (21) மற்றும் பச்சப்பட்டியை சேர்ந்த அசோக் என்கிற பச்சக்கிளி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து அசோக்குமாரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி