சேலம் நகராட்சியில் இருந்து கடந்த 1999-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்படி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. இதில் ஒவ்வொரு வார்டிலும் சுமார் 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வாக்காளர்களை கொண்டு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சேலம் உள்பட 16 மாநகராட்சிகள் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகராட்சியில் ஏற்கனவே உள்ள 60 வார்டுகளை 80 வார்டுகளாக மாற்றும் வகையில் தற்போது மாநகரம் ஒட்டி உள்ள கன்னங்குறிச்சி மற்றும் கருப்பூர் ஆகிய 2 பேரூராட்சிகள் மற்றும் 5 ஊராட்சிகளை சேலம் மாநகராட்சியுடன் இணைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, அமானி கொண்டலாம்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, எருமாபாளையம், சன்னியாசிகுண்டு ஆகிய ஊராட்சிகள் சேலம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. இதனால் மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்யும் பணியில் நகரமைப்பு பிரிவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்றனர்.