சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சக்தி அழைத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைபவம், தீ மிதிவிழா மற்றும் பால்குட ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான சத்தாபரணம் நேற்று முன்தினம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது.
இந்நிலையில், உலக அமைதிக்காகவும், சுமங்கலி பெண்களின் நலனுக்காகவும் நேற்று இரவு கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் கோவில் முன்பு வரிசையாக அமர்ந்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட சுமங்கிலி பெண்களுக்கு மாங்கல்ய பிரசாதமும், பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் சாந்தமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.