சேலம்: வணிக நிறுவனங்களில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

60பார்த்தது
சேலம்: வணிக நிறுவனங்களில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்கள், போலீசார் இணைந்து நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் சோதனை செய்தனர். 

அப்போது, செங்கல் சூளை, சாலையோர கடைகள், ஜவுளிக்கடைகள், லாரி பட்டறைகள், மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட், உணவு நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், உணவு நிறுவனங்களில் வேலை செய்த 4 பேர், மீன் மார்க்கெட்டில் பணிபுரிந்த 2 பேர், பட்டறையில் வேலை செய்த 3 பேர், பெயிண்டிங் வேலை செய்த ஒருவர் என மொத்தம் 10 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். 

இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். 

கடந்த ஆண்டு மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 5 பேரை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வளரிளம் பருவத்தினர் 5 பேரை பணிக்கு அமர்த்திய நிறுவனம் மற்றும் கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி