ஓமலூரை அடுத்த காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிப்பாடி ஆகிய ஊராட்சிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சேலம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் விமான நிலையத்தை 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன.
இதைத்தொடர்ந்து விரிவாக்க பணிக்காக வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விவசாய தோட்டங்களில் உள்ள மரங்கள், வீடுகள் உள்ளிட்டவைகளை கணக்கீடு செய்ய அதிகாரிகள் வருவதும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் திரும்பி செல்வதுமாக இருந்து வருகிறது. இதுகுறித்து கருத்துக்கேட்பு கூட்டங்கள் பலமுறை நடைபெற்றன. அதில் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை விரிவாக்க பணிக்கு தர இயலாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கருப்புக்கொடி கட்டினர். இதுஒரு புறம் இருக்க அதிகாரிகள் வாரத்திற்கு 2, 3 நாட்கள் நில அளவீடு செய்ய வருவதும், எதிர்ப்பு தெரிவித்தால் வேறு இடத்திற்கு செல்வதுமாக இருந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் பொதுமக்கள் நேற்று முன்தினம் குப்பூர் பகுதியில் மின் கம்பத்தில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.