ஓமலூர் கிழக்கு ஒன்றிய தி. மு. க. சார்பில் பச்சனம்பட்டியில் தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கபடி போட்டி நடைபெற்றது. இதில் கிராம அளவிலான கபடி போட்டியில் 6 அணிகள் கலந்து கொண்டன.
முடிவில் பச்சனம்பட்டி குணா பிரதர்ஸ் அணி முதலிடத்தையும், பச்சனம்பட்டி கிரீன் பாய்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஓமலூர் கிழக்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். பின்னர் அவர் சார்பில் முதல் பரிசாக ரூ 5 ஆயிரத்தையும், இரண்டாம் பரிசு பெற்ற அணிக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரமேஷ் சார்பில் ரூ. 3 ஆயிரம் பரிசுத்தொகையை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அன்பரசு வழங்கினார்.
இதில் மாவட்ட பிரதிநிதி தங்கதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் மதன், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.