சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை ஆத்துமேடு மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (வயது 70). வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மூத்த மகன் சென்னையில் வேலை செய்து வருகிறார். தேவராஜன், அவருடைய மனைவி, இளைய மகன் ராஜேஷ் ஆகிய 3 பேரும் வீட்டை பூட்டிவிட்டு, மூத்த மகனை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றனர். நேற்று முன்தினம் (மார்ச்.15) காலை தேவராஜனின் தங்கை மகேஸ்வரி போன் செய்து வீட்டு கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
இதையடுத்து தேவராஜன் சென்னையில் இருந்து உடனடியாக ஓமலூர் வந்தார். அப்போது வீட்டில் பீரோக்களில் இருந்த கம்மல், மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளும், தம்ளர், குத்துவிளக்கு உள்ளிட்ட வெள்ளி பொருட்களும் திருட்டு போய் இருந்தது. இதுதொடர்பாக தேவராஜன் கொடுத்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவராஜன் வீட்டில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.