சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. சென்னை- சேலம், விமான சேவை உதான் திட்டம் அல்லாத டைனமிக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேலம் சென்னை விமான சேவை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேலம்- பெங்களூரு, சேலம்- கொச்சி, சேலம்-ஐதராபாத் பகுதிக்கு விமானம் இயக்கப்படுகிறது. சேலம்- சென்னை மார்க்கத்தில் இண்டிகோ நிறுவனம் மூலம் டைனமிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின் ஐதராபாத் நகரங்களுக்கு உதான் திட்டத்தின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை சேலம் விமான கட்டணம் ரூ. 2, 500 முதல் ரூ. 3, 300 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டணம் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டு 11 ஆயிரம் வரை கட்டணம் உயர்ந்து உள்ளது. அதேபோல் மறு மார்க்கத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு வழக்கமான கட்டணத்தை விட ரூ. 3 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேலத்தில் இருந்து பெங்களூரு கொச்சின் ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.