தமிழகம் முழுவதும் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி வருகிற 29-ஆம் தேதி கிராமசபை கூட்டம் நடக்கிறது. இந்த கிராமசபை கூட்டங்களில், ஏரி, குளம், குட்டை, நீர்பிடிப்பு பகுதிகளை சதுப்பு நிலங்களாக அறிவிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். நீர்நிலைகள், ஏரிகள் அமைந்திருக்கும் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஓமலூர் தொகுதியில் பசுமைதாயகம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
இதில் காடையாம்பட்டி ஒன்றியம் உம்பளிக்கம்பட்டி, பண்ணப்பட்டி ஏரி, கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடமனேரி ஆகிய ஏரிகளின் அருகே விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பசுமைதாயகம் மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவக்குமார், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சபாபதி, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜனனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பசுமைதாயகம் மாநில இணை பொதுச்செயலாளர் சத்ரியசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏரி, குளம், குட்டைகளை சதுப்பு நிலங்களாக வைக்க வேண்டிய அவசியம் குறித்து பேசினார்.