சேலம் விமான நிலையத்தில் அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: -
இன்றைக்கு தி. மு. க. வில் பலர் உழைத்தவர்கள், சிறை சென்றவர்கள் உள்ளனர். அனுபவம் வாய்ந்தவர்கள், மூத்த கட்சியினர் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வழங்கவில்லை. ஆனால் கருணாநிதியின் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு தான் முதல்-அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற சூழ்நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது.
கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தார். அதற்கு பிறகு, மு. க. ஸ்டாலின் இருந்தார். தற்போது உதயநிதி துணை முதல்-அமைச்சராக உள்ளார். அவருக்கு பிறகு அவரது மகன் இன்பநிதி வந்தாலும் ஏற்றுகொள்வோம் என்ற காட்சி தான் தி. மு. க. வில் உள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
மேலும், 2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில் அ. தி. மு. க. ஒருங்கிணைந்தால் தான் வெற்றிபெறும் என ஓ. பன்னீர்செல்வம் கூறி வருகிறாரே என்ற நிருபர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தபோது, அ. தி. மு. க. என்றால் எங்கள் தரப்புக்கு தான் என அனைத்து அங்கீகாரமும் கொடுக்கப்பட்டு விட்டது. ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். அவர் பற்றிய பேச்சுக்கு இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.