கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவா் சங்கர். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ. டி. என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று(அக்.5) மாலை பெங்களூருவில் இருந்து கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
ஓமலூர் நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகிலிருந்த சரபங்கா ஆற்றுக்குள் பாய்ந்தது. தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததாலும், அதிகளவில் செடி, கொடிகள் முளைத்து இருந்ததாலும் காரை ஓட்டிய சங்கர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி கொண்ட சங்கரை மீட்டனர். பிறகு, கிரேனை வரவழைத்து ஆற்றில் பாய்ந்து கிடந்த காரை மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.