மேட்டூர் பூங்காவுக்கு காணும் பொங்கல் விழாவையொட்டி நேற்று காலையில் இருந்தே சேலம் மட்டும் அல்லாமல் பக்கத்து மாவட்டமான ஈரோட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூர் வந்த வண்ணம் இருந்தனர். இவர்களில் ஒரு சிலர் காவிரி ஆற்றில் புனித நீராடி அணைக்கட்டு முனியப்ப சாமியை தரிசனம் செய்தனர். ஒரு சிலர் ஆடு, கோழியை பலியிட்டு முனியப்ப சாமிக்கு பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும் தாங்கள் சமைத்த உணவை பூங்காவிற்கு எடுத்துச் சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். சிறுவர்- சிறுமிகள் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். ஒரு சிலர் அணையின் வலது கரை பகுதியில் உள்ள பவளவிழா கோபுரத்திற்கு சென்று அணையின் முழுமையான தோற்றத்தை கண்டு களித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அதன் காரணமாக மேட்டூர் முனியப்பன் கோவில் அருகில் உள்ள மீன் வருவல் கடைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து மேட்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.