தமிழக நீர்வளத்துறை செயலாளர் மணிவாசனை, மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். அப்போது அவர், கோரிக்கைகள் அடங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: - மேட்டூர் அணை பூங்கா எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
மேட்டூர் அணையின் 5, 8-ஆவது மதகுகளில் இருந்து காவிரி ஆறு வரை உள்ள நீர்வழிப்பாதையில் குண்டும், குழியுமாக உள்ளது. அதில் கான்கிரீட் தளம் அமைத்து முட்புதர்களை அகற்றி நீர்வழிப்பாதையை அழகுபடுத்த வேண்டும். மேட்டூர் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், தாங்கள் கொண்டு வரும் உணவுகளை பூங்காவுக்குள் வைத்து சாப்பிட்டு அசுத்தம் செய்கின்றனர். அணை பூங்கா அருகில் 50 செண்ட் இடம் உள்ளது. அங்கு உணவு அருந்தும் கூடம் கட்டுவதற்கு ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அணை பூங்காவுக்குள் மது அருந்துவதை தடுக்க வேண்டும்.
மேட்டூர் அணை பூங்காவில் அனைத்து விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகிறது. இதில் விளையாடும் குழந்தைகள் காயம் அடைந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. எனவே விளையாட்டு உபகரணங்களை மாற்றி புதிய நவீன விளையாட்டு உபகரணங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.