மேட்டூர் அணை பாசனதேவை மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 1934-ம் ஆண்டு கட்டப்பட்டது. மேட்டூர் அணை 12 மாவட்டங்களின் பாசன தேவை மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதத்துடன் நிறுத்தப்படும். தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மட்டுமே வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும். இதுபோன்று அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ள நிலையில் அணையில் தண்ணீர் நீண்ட நாட்களாக தேங்கி வருகிறது.
இதுபோன்ற நாட்களில் அணையின் தண்ணீரில் பச்சை நிறமாக மாறி பாசி படர்ந்து துர்நாற்றம் வீச தொடங்கும். இந்த சூழ்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செறிவூட்டப்பட்ட நுண்ணுயிர் தெளிப்பான்களை அணையில் தெளித்து துர்நாற்றத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக நுண்ணுயிர் தெளிப்பான் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த அணையின் 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி லேசான துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி துர்நாற்றம் வீசுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.