சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழக முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்கிறார். இந்த நிலையில் மேட்டூர் அணையில் திருச்சி மண்டல தலைமை என்ஜினீயர் தயாளுகுமார் ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையில் நடந்து வரும் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அணையின் நீர்வரத்து, வெளியேற்றும் நீர், நீர் இருப்பு குறித்த பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டு கடைமடை வரை தண்ணீர் சென்றடைய வழிவகை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். ஆய்வின் போது, சேலம் வட்ட கண்காணிப்பு என்ஜினீயர் சிவகுமார், மேட்டூர் நிர்வாக என்ஜினீயர் வெங்கடாஜலம், உதவி நிர்வாக என்ஜினீயர்கள் செல்வராஜ், மதுசூதனன், அணைப்பிரிவு உதவி என்ஜினீயர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.