நீா் நிலைகளில் இருந்து விவசாயப் பயன்பாட்டுக்கு நீா்வளத் துறை பொறுப்பு அலுவலா்களால் குறியீடு செய்து காட்டப்படும் பகுதியில் மட்டும் குறிப்பிட்ட ஆழத்துக்கு மிகாமல் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே மண் எடுத்துச் செல்ல வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாவது:
சேலம் மாவட்டத்தில் வண்டல், களிமண், மண் ஆகியவற்றை விவசாய பயன்பாடு, மண்பாண்ட தொழிலுக்கு எடுத்துச்செல்ல தகுதி வாய்ந்த 200 நீா்நிலைகள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு, இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இணையவழி மூலமாகவே வட்டாட்சியா்களால் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டதற்குரிய அனுமதி மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. நீா்நிலைகளில் இருந்து விவசாயம், மண்பாண்ட பயன்பாட்டுக்கு வண்டல் மண், களிமண் எடுத்துச் செல்வதை உறுதி செய்யும் வகையில், ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டதற்கு இணங்க, வட்டாட்சியரால் வழங்கப்படும். இணையவழி அனுமதியுடன் மாவட்ட ஆட்சியரால் நிா்ணயம் செய்துள்ள தொடா்புடைய ஏரியின் நீா்வளத் துறை அல்லது ஊரக வளா்ச்சித் துறை பொறுப்பு அலுவலா்களிடம் நடைச்சீட்டும் பெற்று பயனாளிகள் வண்டல், களிமண், மண் எடுத்துச் செல்ல வேண்டும் என மீண்டும் நினைவுபடுத்தப்படுகிறது.