சேலம் மாவட்டம், வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் திருச்சி மெயின் ரோடு அருகே உள்ள பட்டு கரையான் திட்டு என்கிற பகுதியில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வரப்பெற்றால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு விவசாய நிலங்கள் மற்றும் விவசாயக் கிணறுகள் நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்து விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தை நிறுத்த கோரி பலமுறை மனு அளித்தும் திட்டத்தை செயல்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டியதை அறிந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அம்பேத்கர் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வீரகனூர் காவல் நிலையத்தில் மனு கொடுத்துவிட்டு, வீரகனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பி, அறவழிப் போராட்டத்தை ஈடுபட்டனர்.