சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சின்னபுனல்வாசலை சேர்ந்த அழகுவேல் மகன் பிரதீஷ்குமார் (வயது 30). என்ஜினீயர். பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா உலகங்காத்தானை சேர்ந்த வேலு மகள் கவியரசி (24) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கவியரசி பயோமெடிக்கல் படித்து இருந்தார். தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு கவியரசிக்கும், கணவர் வீட்டில் உள்ளவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. திடீரென தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு கவியரசி வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை தட்டிபார்த்தனர். கதவு திறக்கப்படவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் கவியரசி பிணமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கவியரசி உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.