சேலம் மாவட்டம், வளையமாதேவி பகுதியில் அரசு டாஸ்மாக் கடையின் (71 42) பாரில் காலையிலேயே மது பாட்டில்களோடு சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆத்தூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் கருத்தான் மகன் ரவி (44) இவருக்கும் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் முன் டாஸ்மாக் பார் எடுப்பதில் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ரவியின் நண்பர் இளங்கோ மன்னன், சரண் வினோத் ஆகியோருடன் சேர்ந்து வளையமாதேவியில்ஜோதிவேல் நடத்தி வரும் பாரில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை சாக்கு மூட்டையில் வைத்து விற்பதாக சித்தரித்து வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாக ஆத்தூர் ஊரக போலீசார் ரவி இளங்கோ மன்னன் வினோத் சரண் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.
மேலும் அனுமதியின்றி பார் நடத்தியதாக ஜோதிவேல் மற்றும் வீரகனூர் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.