சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னமுத்தூரில் பெண் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக சகாய செல்வியா உள்ளார். இந்த இல்லத்திற்கு சேலம் மாவட்ட குழந்தைகள் நல குழுவின் சார்பில் கடந்த மே 23ஆம் தேதி பவித்ரா என்ற சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமியை இல்லத்தினர் கவனித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 4) பவித்ரா வெளியே விட்ட செருப்பை எடுத்து வருவதாக கூறி இல்லத்தின் வெளிப்புறத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மீண்டும் இல்லத்திற்கு வரவில்லை. உடனே கண்காணிப்பாளர் சகாய செல்வியா மற்றும் ஊழியர்கள் அப்பகுதியில் தீவிரமாக தேடினர். மேலும் எடப்பாடி டவுன் ஆவணி பேரூர் பூலாம்பட்டி பகுதிகளிலும் சிறுமியை தேடிப்பார்த்தோம் கிடைக்கவில்லை. இது பற்றி எடப்பாடி போலீசில் ஒருங்கிணைப்பாளர் சகாய செல்வியா புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் குழந்தைகள் இல்லத்தில் இருந்து மாயமான பவித்ராவை தீவிரமாக தேடி வருகின்றனர். அதில் அவர் எங்கிருந்து மீட்கப்பட்டு சேலம் குழந்தைகள் நலக் குழுவின் வரவேற்பு இல்லத்திலிருந்து எடப்பாடி இல்லத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டார் என்று விவரத்தை சேகரித்து வருகின்றனர். பெண் குழந்தைகள் இல்லத்தில் சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.