எடப்பாடியில் சிறுத்தை புலி நடமாட்டம்? வனத்துறை கண்காணிப்பு

52பார்த்தது
எடப்பாடியில் சிறுத்தை புலி நடமாட்டம்? வனத்துறை கண்காணிப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் பக்க நாடு ஊராட்சி, சன்னியாசி முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் பழனிசாமி, விவசாயி.
இவரது விவசாய தோட்டம் அங்குள்ள வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இவரது விவசாய தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு திடீரென காணாமல் போனது. இதையடுத்து நேற்று அதிகாலை பழனிசாமி தனது தோட்டத்தில் கட்டி இருந்த ஆட்டினை தேடி சென்றார்.
அப்போது சற்று தூரத்தில் உள்ள வனப்பகுதியில் ஆடு இறந்து கிடப்பதும், அதன் உடலில் பெரும் பகுதியை மர்ம விலங்கு கடித்து இருப்பதையும் கண்டு பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அங்கிருந்த மர்ம விலங்கின் கால் தடங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து ஆட்டினை வேட்டையாடிய மர்ம விலங்கின் கால் தடம் சிறுத்தை புலியின் கால் தடத்தை போல் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த வனத்துறையினர், அது குறித்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் மாவட்ட உதவி வன அலுவலர் செல்வகுமார் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி