சேலம் மாவட்டம் தேவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்படுகிறது. அதிலும் மஞ்சள் சாகுபடியில் அப்பகுதி விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
பயிரிடப்பட்டு 10 மாதங்களான மஞ்சள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வேகவைத்து காய வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் பெய்த காற்றுடன் கூடிய மழையால் மஞ்சள் நீரில் நனைந்து சேதமடைந்தன. இதனால் அதன் நிறம் மாறியுள்ளது. என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து மஞ்சள் விவசாயிகள் வேதனையுடன் கூறியதாவது: - தேவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்து வருகிறோம்.
மஞ்சள் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை செலவு செய்து பராமரிப்பு பணிகள் செய்து வந்தோம். ஆனால் தற்போது அறுவடை பணி முடிந்து மஞ்சளை வேக வைத்து வெயிலில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த தருணத்தில் நன்றாக வெயில் அடித்தால் மட்டுமே மஞ்சள் காய்ந்து நிறம் வரும், தற்போது திடீரென்று மழை பெய்ததால் மஞ்சள் மழை நீரில் நனைந்துள்ளது.
இதனால் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளோம். மஞ்சள் நிறம் மாறி அதன் தரம் குறையும், தரம் குறைந்தால் விலையும் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.