கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த காரணத்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து அதிகளவில் செல்கிறது. அதன்படி தேவூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் அதிக தாழ்வான பகுதியாக கருதப்படும் காவேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சி மதிக்கிழான் திட்டு, மணக்காடு பகுதிகளில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து சென்றது. தேவூர் அருகே அண்ணமார் கோவில் பகுதியில் உள்ள வீடு, கிணறு, விவசாய நிலங்களை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் கோனேரிபட்டியில் இருந்து அரசிராமணி செல்லும் குடிநீர் ஏற்று நிலையம், காவேரிபட்டி பரிசல் துறையில் இருந்து தேவூர் பகுதிக்கு செல்லும் குடிநீர் ஏற்று நிலையம், புள்ளாக்கவுண்டம்பட்டியில் இருந்து சங்ககிரி, திருச்செங்கோடு பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் ஏற்று நிலையங்களை தண்ணீர் சூழ்ந்தது.
காவிரி கரையோர பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பருத்தி, வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, வெண்டை, சோளம் ஆகியவை தண்ணீர் மூழ்கின.
மேலும் கரையோர மின் மோட்டார் கிணறுகள் தண்ணீரில் மூழ்கியதால் காவிரி கரையோர பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.