ஜலகண்டாபுரம் அருகே மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் இறந்தது

66பார்த்தது
ஜலகண்டாபுரம் அருகே மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் இறந்தது
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் கிராமம் பாவாடை செட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பரமசிவம். இவர் 15-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆடுகளைப் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். நேற்று அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் பரமசிவம் எழுந்து பட்டிக்குச் சென்றார். அப்போது மர்ம விலங்கு ஒன்று அங்கிருந்து ஓடியது. அதைக் கண்ட பரமசிவம் பட்டிக்குச் சென்று ஆடுகளைப் பார்த்தார். 

அப்போது 9 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் குதறியதில் இறந்தது தெரியவந்தது. மேலும் வீட்டு அருகில் இருந்த 2 கோழிகளையும் மர்ம விலங்கு கடித்துக் குதறியதில் இறந்தது தெரிந்தது. இதைக் கண்டு பரமசிவம் அதிர்ச்சி அடைந்தார். மர்ம விலங்கு கடித்துக் குதறியதில் ஆடுகள் இறந்தது குறித்து அவர் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மர்ம விலங்கு கடித்துக் குதறிய ஆடுகள், கோழிகளைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் மர்ம விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். இதேபோல் இந்தப் பகுதியில் மர்ம விலங்கு ஆடு, மாடு மற்றும் நாய்களைக் கடித்துக் குதறும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் சிறுத்தை நடமாட்டம் இருக்கலாம்? என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி