சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று காலை வழக்கம் போல இப்பள்ளியின் இரண்டு வேன்கள் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பெரிய கிருஷ்ணாபுரம் அருகே அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தது. அப்போது
சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை வேன்கள் கடக்க முயன்றபோது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் இந்த இரண்டு பள்ளி வேன்கள் மீதும் ஒரே நேரத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு பள்ளி வேன்களிலும் பயணித்த மாணவர்கள்10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பள்ளி குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனியார் பள்ளி வேன்கள் விபத்தானது குறித்து தகவல் வெளியானதால் விபத்து நடந்த பகுதியில் பெற்றோர்கள் குவிந்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஏத்தாப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் பள்ளி குழந்தைகளை கலெக்டர் கார்மேகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.